Image

இன்று – மே 31 : உலக புகையிலை எதிர்ப்பு நாள். இதையொட்…

இன்று – மே 31 : உலக புகையிலை எதிர்ப்பு நாள். இதையொட்டி, டாக்டர் விகடன் இதழில் இருந்து ஒரு பகிர்வு…

‘சிகரெட் மறந்த கதை!’ – சீக்ரெட் உடைக்கிறார் பாலகுமாரன்

”முதன்முதலில் நான் நிகோடினை ருசிக்க ஆரம்பித்ததன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யம் உண்டு. படித்துக்கொண்டு இருந்த அந்தக் காலகட்டத்தில் சரியான பயந்தாங்கொள்ளி நான். அதனாலேயே சிகரெட் பிடித்தால், ‘நான் பெரியவன்; என்னை யாரும் அசைக்க முடியாது’ என்கிற தப்பான மனோபாவம் என்னுள் வளர்ந்தது. அதற்குக் காரணம் வில்லன் நடிகர் மனோகர். அந்தக் கால சினிமாக்களில், சிகரெட் புகையை அலட்சியமாய் வழியவிட்டபடி தெனாவட்டாக வில்லத்தனம் காட்டுவார். அதில் ஒரு ‘கெத்’ இருக்கும். அவரைப் போல் பள்ளிப் பருவத்திலேயே சாக்பீஸ் துண்டுகளை உதட்டில் கவ்வி சிகரெட் புகைக்கும் பாவனைகளைச் செய்துபார்ப்பேன். ஒருமுறை என்.சி.சி. முகாமுக்காக புழல் ஏரி சென்றபோதுதான், முதன்முதலாக சிகரெட் புகைத்தேன். அப்போது எனக்கு 19 வயது.

படிப்பு முடிந்து 21 வயதில், வேலைக்குச் சேர்ந்த (டாஃபே டிராக்டர் கம்பெனி) இடத்திலும்கூட இருக்கையில் உட்கார்ந்தே சிகரெட் பிடிக்கிற அளவுக்கு சுதந்திரம் இருந்தது. மதிய உணவு வேளையிலும்கூட சிகரெட் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே, அவசரம் அவசரமாகச் சாப்பிட்டு முடித்துவிட்டு ஆற அமர உட்கார்ந்து சிகரெட் புகைத்திருக்கிறேன். இதற்கிடையில், காதல் வயப்பட்டு தோல்வியும் அடைந்தேன். எல்லோரும் சொல்வதுபோல புண்பட்ட நெஞ்சை கொஞ்சம் அதிகமாகவே புகைவிட்டு ஆற்றத் தொடங்கினேன். ஒரு நாளில், மூன்று நான்கு சிகரெட்களில் ஆரம்பித்த பழக்கம் பாக்கெட், இரண்டு பாக்கெட்… என்று அதிகரித்து ஒரு நாளில் 120 சிகரெட்களை ஊதித் தள்ளும் நிலைக்கு ஆளானேன். இதற்காகவே கடைகளில், மொத்தமாக சிகரெட்களை வாங்கிவந்து வீட்டில் ஸ்டாக் வைத்துக்கொள்ளும் நிலைமைக்கு வந்துவிட்டேன்” – கதைபோல விரிகிறது பாலகுமாரனின் சிகரெட் சிநேகம்.

”கல்யாணம் முடிந்த சமயத்தில், நான் பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்துவிட்டேன். எழுத்தாளர்களுக்கு ஆறாவது விரல் பேனா என்பார்கள். எனக்கு வலது கையில் ஆறாவது விரல் பேனா என்றால், இடது கையில் சிகரெட்! வீட்டில் என்னைக் கண்டித்துப் பார்த்து ஓய்ந்துவிட்டார்கள். எழுத உட்கார்ந்து தொடர்ச்சியாக நான் பிடிக்கும் சிகரெட் புகை வீடு முழுவதும் வியாபித்திருக்கும். எங்கேயாவது வெளியூர் போனால்கூட குறைந்தது ஐந்து நாட்களுக்காவது நான் விட்டுச்சென்ற சிகரெட் புகை வாசம் வீட்டில் வீசிக்கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு என் உடல் நலத்தை மட்டும் அல்லாது என் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும் சேர்த்து கெடுத்து வைத்திருந்தேன்.

‘இனி சிகரெட் புகைக்க மாட்டேன்’ என்று ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் சபதம் எடுத்துக்கொள்பவர்களைப் போல, ‘புகைக்க மாட்டேன்’ என்று உறுதி எடுப்பது, அடுத்த சில மணி நேரத்திலேயே உறுதியை உடைத்து ஊதித் தள்ளுவது என்பது எனக்கும் பழக்கமாகிப்போனது.

அவ்வப்போது மொத்தமாகக் கிடைக்கும் பணத்தில், மகள் திருமணத்திற்காக ஒவ்வொரு தங்கக் காசாக வாங்கிவந்து மர டப்பா ஒன்றில் சேமித்துவருவது எங்கள் குடும்பப் பழக்கம். 1992-ல் என் மகள் பள்ளி இறுதி வகுப்பு படித்த சமயம் அந்த மர டப்பாவில் உள்ள காசுகளை எண்ணிப் பார்த்தபோதுதான் எனக்குள்ளே ஓர் எண்ணம்… ‘தினமும் நாம் சிகரெட்டுக்கு செலவழிக்கும் பணத்தை தங்கக் காசுகளாகச் சேர்த்துவைத்திருந்தால் மரப்பெட்டியையும் நிரப்பி, சொந்தமாக வீடும் கட்டியிருக்கலாமே!’ ஒரு கட்டத்தில் அதுவே குற்ற உணர்வானது.

என் குருநாதர் திருவண்ணாமலை மஹான் யோகி ராம்சுரத்குமார் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உடையவர். அவரும் செயின் ஸ்மோக்கர். அவரிடம் இப்பழக்கம் போக வேண்டும் என்று கேட்டபோது, ‘தானாகப் போகும்’ என்றார். இது நடந்து பல மாதங்களுக்குப் பிறகு, ஒரு இரவு மூடிய கடை வாசலில் அமர்ந்து சிகரெட் பிடிக்கும்போது ‘இந்த பாக்கெட்தான் கடைசி, இனி சிகரெட் இல்லை’ என்று திரும்பத் திரும்ப உள்ளே சொல்லியபடி புகைத்தேன்.

காலையில் எழுந்தேன். நிகோடின் தேவையை மூளை உணர்த்த… விரல்களும், உதடுகளும் சிகரெட்டுக்காகத் துடிக்க ஆரம்பித்தன. கட்டுப்படுத்திக்கொண்டேன். சிரமப்பட்டு நேரத்தைக் கடத்தியவாறே அடுத்தடுத்த வேலைகளில் கவனம் செலுத்தினேன். மதிய வேளையும் வந்துவிட்டது. ‘அரை நாள் முழுவதும் நான் புகைக்காமல் இருந்துவிட்டேனா?!’ என்று எனக்கே ஆச்சர்யம். அந்த ஆச்சர்யமே, என்னால் முடியும் என்ற நம்பிக்கையாக வேரூன்றியது. அடுத்தடுத்த நாட்களிலும் அந்த நம்பிக்கையே என்னை வழிநடத்தியது. வாரம், மாதங்கள், வருடங்கள் கடந்து இன்றுவரை நான் சிகரெட்டைச் சீண்டவே இல்லை! இது எல்லாம் என் குருநாதர் யோகி ராம் சுரத்குமார் ஆசிர்வாதம்!

ஆனாலும், செய்த பாவத்துக்கு தண்டனை பெறத்தானே வேண்டும்? செயின் ஸ்மோக்கராக நான் சிகரெட் பிடித்திருந்ததில், நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதய ரத்த ஓட்டம் தடைபட்டது. பை-பாஸ் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு சீரானேன். மறுபடியும் ரத்தக் குழாயினுள் அடைப்பு… இரண்டாவது பை-பாஸ் சிகிச்சை. உடம்பு முழுக்க ஊசிகள் தைத்துவைத்திருந்ததில், நரக வேதனை!

‘பை-பாஸ் சிகிச்சை எளிதாகிவிட்டது’ என்று டாக்டர்கள் சொல்கிறார்கள், உண்மை; அவர்களுக்கு கைவந்த கலையாகி விட்டது. ஆனால், அதன் பின்னர் காலமெல்லாம் பாதிப்புகளை நோயாளிகள் சுமந்துகொண்டு தானே இருக்க வேண்டி இருக்கிறது?

இப்போதெல்லாம் சிகரெட் பிடிப்பவர்களைக் கண்டால், ஒதுங்கிப் போய்விடுகிறேன். தெரிந்தவர்கள் என்றால், ‘தயவுசெய்து புகைப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். நான் சொல்வதற்காக அல்ல; சிகரெட் புகைத்து ஆஸ்பத்திரி, இருமல், ஆபரேஷன் என நரக அவஸ்தைக்கு ஆளாவதை நேரில் பார்த்துவிட்டு முடிவெடுங்கள்!’ என உரிமையோடு சொல்கிறேன்!” – படிப்பவர்கள் அனைவருமே பாலகுமாரனுக்குத் தெரிந்தவர்கள்தானே!

– த.கதிரவன்



This post is pressed by Chikoo

Leave a comment